வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்கப்படும் முறைகேடுகளை ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்கப்படும் முறைகேடுகளை ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 7:00 PM GMT)

வருமான வரித்துறையினரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்படும் முறைகேடுகளை ஐகோர்ட்டு தானாக முன்வந்து தனது கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காண்டிராக்டர் செய்யாத்துரையின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் 641 கிலோமீட்டர் தூர சாலைகள் பராமரிப்பு பணியை ரூ.552 கோடிக்கு செய்யாத்துரை நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு மேல் 5 சதவீதம் உயர்த்தி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூர சாலை பராமரிப்புக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை தான் செலவு ஆகும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறும் நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூர சாலை பராமரிப்பு பணி ரூ.1 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதே போன்று 8 வழிச்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போடுவதற்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கத்தில் சாலை போட்டால் கூட இந்த அளவுக்கு நிதி தேவை இருக்காது.


வருமான வரித்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வுத்துறையினர் தமிழக அரசின் தலைமை செயலாளர், அமைச்சர் மற்றும் அரசுதுறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்த போதிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குபதிவு செய்யப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கையின் நிலை என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் விடும் முறையை கொண்டு வந்தார். இதை அவர் சட்டசபையில் அறிவித்த போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது செய்யாத்துரை நிறுவனத்துக்கு 5 மாவட்டங்களின் சாலை பராமரிப்பு பணி கொடுக்கப்பட்டுள்ளது.


வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன் முறைகேடுகள் பற்றியும் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஐகோர்ட்டு இந்த சோதனை நடைமுறைகளை பற்றி நேர்மையான அதிகாரிகளை நியமித்து தனது நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு அ.தி.மு.க. அரசை பணியவைத்து அரசியல் லாபம் பெறுவதற்காக இந்த சோதனை நடத்துகிறதா அல்லது இதன் மூலம் ஆதாயம் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகளை எடுக்கிறதா என தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story