ஸ்மார்ட் மின் மீட்டர் விவகாரம்; அ.தி.மு.க. வெளிநடப்பு


ஸ்மார்ட் மின் மீட்டர் விவகாரம்; அ.தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 20 July 2018 4:15 AM IST (Updated: 20 July 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படுவதை கண்டித்து புதுவை சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம் வருமாறு:-அன்பழகன்: புதுவையில் சமீபத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் கட்டணம் அதிகமாக வருகிறது. ஏழை மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த கட்டணத்தை குறைக்க போகிறீர்களா? இல்லையா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: கட்டணத்தை குறைக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. அது இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்தான் உள்ளது. மின்துறை ஊழியர்கள் காலத்தோடு அளவீடு செய்யாததும் இதற்கு ஒரு காரணம். அதை சரியாக செய்ய சொல்லலாம்.

அன்பழகன்: நீங்கள் மின்கட்டணத்தையும் குறைக்கவில்லை. பழைய மீட்டரை அகற்றி புதிய ஸ்மார்ட் மின் மீட்டரையும் பொருத்தி வருகிறீர்கள். தேவையில்லாத சீனா மீட்டரை பொருத்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள். இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

(இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் சபையைவிட்டு வெளியேறினார்கள்.)

சிவா: இந்த புதிய ஸ்மார்ட் மின் மீட்டரால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பராமரிப்பது மிகவும் கஷ்டம். அந்த மீட்டர் பொருத்தும் திட்டத்தை வாபஸ் வாங்குங்கள். இதனால் பிரச்சினை ஏற்படுகிறது.

அமைச்சர் கமலக்கண்ணன்: இந்த புதிய ஸ்மார்ட் மின் மீட்டர் தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story