ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 9:35 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கிறது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவிகள் மற்றும் பிரதான மெயின் அருவி, பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகள் பாறைகள் வெளியே தெரியத்தொடங்கின.

இருப்பினும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டி சீல் வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு கார், வேன், இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் தர்மபுரி, பென்னாகரத்தில் இருந்து பஸ்கள் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை நேற்று 11-வது நாளாக நீடித்தது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி கரைக்கு சென்று பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story