தங்க சங்கிலி என்று நினைத்து மஞ்சள் கயிறை பறிக்க முயன்ற வாலிபர்


தங்க சங்கிலி என்று நினைத்து மஞ்சள் கயிறை பறிக்க முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 20 July 2018 3:45 AM IST (Updated: 20 July 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி என்று நினைத்து மஞ்சள் கயிறை பறிக்க முயன்ற வாலிபர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.

கோவை,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் உள்ள பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவருடைய மனைவி சாந்தாமணி (32). இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றார். அவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் சாந்தாமணியிடம் முகவரி கேட்பது போல் பேசியுள்ளார்.

அப்போது அவர் திடீரென்று சாந்தாமணி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டும் அணிந்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். உடனே சாந்தாமணி திருடன், திருடன் என கத்தினார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அந்த நபர் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் ஒப் படைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர், நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்த வெங்கட்ராமன் (29), கோவையை அடுத்த போத்த னூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கட்ராமனை கைது செய்தனர். மேலும் அவர் வேறு எங்காவது நகை பறித்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சாந்தாமணி, தனது நகையை கழற்றி வைத்துவிட்டு, புது மஞ்சள் கயிறு அணிந்து நடைபயிற்சிக்கு சென்று உள்ளார். அவர் நடந்து சென்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை. அப்போது நகை பறிக்க வந்த வெங்கட்ராமன், சாந்தாமணி கழுத்தில் கிடந்த புது மஞ்சள் கயிறை, தங்க நகை என்று கருதி பறிக்க முயன்றுள்ளார். அப்போது தான் அது மஞ்சள் கயிறு என்பது அவருக்கு தெரிந்தது. உடனே அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து மர்ம ஆசாமிகள் நகை பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள். எனவே பெண்கள் நடைபயிற்சி செல்லும்போது நகை அணிந்து செல் வதை தவிர்க்க வேண்டும். வழிப்பறியை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story