மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கடைக்கோடி விவசாயிக்கும் தண்ணீர் கிடைக்கும்


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கடைக்கோடி விவசாயிக்கும் தண்ணீர் கிடைக்கும்
x
தினத்தந்தி 20 July 2018 4:30 AM IST (Updated: 20 July 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடைக்கோடி விவசாயிக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் மளமளவென உயர்ந்தது. இதனால் நீர்வரத்து சீராக இருந்ததால் குறுவை சாகுபடி பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டார். பின்னர், அவர் காவிரி தண்ணீரை வரவேற்கும் விதமாக பூக்களை தண்ணீர் மீது தூவினார். அவரை தொடர்ந்து 6 அமைச்சர்களும் பூக்களை தூவினர். ஏற்கனவே குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரும்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரபாகர் வரவேற்றார். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்றைய தினம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக நீண்டகாலம் போராடினார்கள். அவர்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தற்போது 48 ஆண்டுகளுக்கு பின் காவிரி நீர் உரிமை மீட்கப்பட்டுள்ளது. அதாவது, காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது வரலாற்று மிக்க சாதனை ஆகும். இதன்மூலம் ஜெயலலிதாவின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி நீரை பெறுவதற்காக ஜெயலலிதா தன்னையே வருத்திக்கொண்டு சுமார் 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, சட்டப்போராட்டம் நடத்தினார்.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் மற்றும் 2-வது நாளில் காவிரி பிரச்சினை பற்றி பேசினார். அப்போது, நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். காவிரி பிரச்சினை குறித்து மத்தியில் நீர்வளத்துறை மந்திரியாக இருந்த உமாபாரதி தலைமையில் கர்நாடக அரசு, தமிழக அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அதில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அனுப்புங்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

மேலும், அவரோடு பொதுப்பணித்துறை செயலாளர்களும், அதிகாரிகளும் சென்று நம்முடைய பிரச்சினைகளை எல்லாம் எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்கிற கருத்தையும் கடிதம் மூலமாக கொடுத்து அனுப்பினார்கள். தனது இறுதிமூச்சு இருக்கும் வரை தமிழக மக்களுக்காக உழைத்தவர் ஜெயலலிதா. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தனது உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் இறுதிக்கட்டத்தில் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க போராடியவர் ஜெயலலிதா, என இந்த நேரத்தில் மனம் உருகி தெரிவித்துக்கொள்கிறேன்.

போராட்டத்தின் வாயிலாகத்தான் இந்த வெற்றியை பெற்று இருக்கின்றோம். ஜெயலலிதாவின் விடாமுயற்சி காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டது. அதேபோல், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி.தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால் இறைவனின் அருளாலும், வருணபகவானின் கருணையாலும் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூருக்கு வினாடிக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் மேட்டூர் அணை வறண்டு காணப்பட்டது. ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியை தாண்டியுள்ளது. இன்னும் 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடத்தி தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்படும். அதாவது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 45.95 டி.எம்.சி., செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி., அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி., நவம்பர் மாதம் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி., 2019-ம் ஆண்டில் ஜனவரி மாதம் 2.7 டி.எம்.சி., பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும் 2.50 டி.எம்.சி.தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மூலம் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இனிமேல் அப்படி இருக்காது. நமக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய 2 அமைப்புகளும் முறைப்படி பெற்று தரும்.

தமிழ்நாட்டில் முன்பருவம், காரிப்பருவம் மற்றும் பின்பருவம் ராபி முதலான சாகுபடி பருவத்தில் பயிரிடும் பயிர்களுக்கு உபயோகித்திட 20 முதல் 25 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இந்த ஆண்டிற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. 2018-19-ஆம் நிதியாண்டில், காரிப் மற்றும் ராபி பயிர் சாகுபடி தேவைக்காக யூரியா 9.90 லட்சம் மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2.25 லட்சம் மெட்ரிக் டன், பொட்டாஷ் 4.60 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் உரவகைகள் 5.90 லட்சம் மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

இந்த ஆண்டு காரிப்பயிர் சாகுபடிக்கு என மத்திய அரசு, யூரியா 3 லட்சம் மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1 லட்சம் மெட்ரிக் டன், பொட்டாஷ் 1.50 லட்சம் மெட்ரிக் டன், மற்றும் உரவகைகள் 2 லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்துள்ளது. காரிப் பருவத்தில் இதுநாள் வரை யூரியா 1.68 லட்சம் மெட்ரிக் டன், டி.ஏ.பி. 0.47 லட்சம் மெட்ரிக் டன், பொட்டாஷ் 0.72 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் உரவகைகள் 0.78 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் பெறப்பட்டுள்ளது.

தற்சமயம் யூரியா 0.96 லட்சம் மெட்ரிக் டன், டி.ஏ.பி. 0.51 லட்சம் மெட்ரிக் டன், பொட்டாஷ் 0.49 லட்சம் மெட்ரிக் டன், மற்றும் உரவகைகள் 1.09 லட்சம் மெட்ரிக் டன், ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் மட்டும் யூரியா 3 லட்சம் மெட்ரிக் டன், டி.ஏ.பி. 0.17 லட்சம் மெட்ரிக் டன், பொட்டாஷ் 0.13 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் உரவகைகள் 0.32 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன.

சம்பா பயிர் சாகுபடி மற்றும் இதர காரிப் பருவ பயிர்கள் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், மத்திய அரசு உரங்கள் துறை இணைச்செயலாளர் அவர்கள் நடத்திய வாராந்திர காணொலி காட்சியில், தமிழ்நாட்டிற்கு மேலும் கூடுதலாக யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் உரங்களை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

டெல்டா பாசன விவசாயிகளுக்கு தேவையான நீர் இன்று முதல் திறக்கப்படுகின்றது. படிப்படியாக நீரின் அளவை அதிகரித்து, விவசாயிகளுக்கு பாசனத்திற்கு எவ்வளவு நீர் தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு முழுமையாக திறக்கப்படும். காவிரி டெல்டா பாசனத்தில் கடைக்கோடி விவசாயிக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை, மேற்கு கரை பாசன விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, ராஜா, மருதமுத்து, சின்னதம்பி, அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், கே.ஆர்.எஸ்.சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், முன்னாள் கவுன்சிலர் கே.பி.பாண்டியன், மாமாங்கம் செங்கோட்டையன், மேட்டூர் நகர கூட்டுறவு சங்கி தலைவர் சந்திரசேகரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் கே.ஜி.குருசாமி, மேட்டூர் நகராட்சி முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, லலிதா சரவணன், முன்னாள் துணைத்தலைவர் கே.ஜி.ராமகிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை முதற்கட்டமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 109 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,01,277 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சரே நேரில் வந்து மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டதை தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி மேற்பார்வையில் சேலம் சரக டி.ஐ.ஜி.செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழக மக்களின் உரிமைகளை மீட்கவும், காவிரி நீர் பெற்று தருவதற்காகவும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது இறுதிமூச்சு வரை போராடினார் என அவர் கூறினார். மேலும் அவர் காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடிய விதம் குறித்து தொடர்ந்து பேசினார். அப்போது விழா மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனம் உருகி கண் கலங்கியபடி பேசினார். மேலும் அவரது பேச்சு உச்சரிப்பிலும் உருக்கம் இருந்ததை காண முடிந்தது.

Next Story