124 அடியை எட்டியது கே.ஆர்.எஸ். அணையில் குமாரசாமி இன்று சிறப்பு பூஜை செய்கிறார் பலத்த போலீஸ் பாதுகாப்பு


124 அடியை எட்டியது கே.ஆர்.எஸ். அணையில் குமாரசாமி இன்று சிறப்பு பூஜை செய்கிறார் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 July 2018 4:30 AM IST (Updated: 20 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

124 அடியை எட்டியுள்ள கே.ஆர்.எஸ். அணையில் முதல்–மந்திரி குமாரசாமி இன்று பூஜை செய்கிறார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மண்டியா, 

124 அடியை எட்டியுள்ள கே.ஆர்.எஸ். அணையில் முதல்–மந்திரி குமாரசாமி இன்று பூஜை செய்கிறார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டியது. வடகர்நாடக மாவட்டங்கள், கர்நாடக கடலோர மாவட்டங்கள், தென்கர்நாடக மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி, ஹேமாவதி, கிருஷ்ணா, துங்கா, பத்ரா, கபிலா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பின. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் முழுமையாக நிரம்பி விட்டன என்றே சொல்லலாம்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதில் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து இருந்தது. இதேபோல் 2284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) கொண்ட கபினி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக இவ்விரு ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

124.10 அடியை எட்டியது

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 124.10 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 63 ஆயிரத்து 207 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரத்து 164 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் நேற்றைய நிலவரப்படி கபினி அணையின் நீர் இருப்பு 2,282.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 658 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மொத்தம் வினாடிக்கு 59 ஆயிரத்து 184 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று திடீரென தண்ணீர் திறப்பு கடுமையாக குறைக்கப்பட்டது.

முதல்–மந்திரி குமாரசாமி

இந்த நிலையில் 20–ந் தேதி(அதாவது இன்று) முதல்–மந்திரி குமாரசாமி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அணை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு முக்கிய அணையாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை கடந்த 2014–ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. இம்முறை ஜூலை 2–வது வாரத்திலேயே அணை நிரம்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

2–வது முறையாக பூஜை

முதல்–மந்திரி குமாரசாமி கே.ஆர்.எஸ். அணையில் இன்று(வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை செய்கிறார். கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 2–வது முறையாக பூஜை செய்ய உள்ளார். இதற்கு முன்பு அவர் கடந்த 2007–ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்)–பா.ஜனதா கூட்டணியில் முதல்–மந்திரியாக இருந்தபோது பூஜை செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 அடிதான் பாக்கி

கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் மட்டுமல்லாது லிங்கனமக்கி, சுபா, வரகி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மல்லபிரபா, அலமட்டி, நாராயணபுரா ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் ஹாரங்கி, துங்கபத்ரா, அலமட்டி ஆகிய அணைகள் நிரம்ப இன்னும் 2 அடிதான் பாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story