பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 19 July 2018 10:44 PM GMT (Updated: 19 July 2018 10:44 PM GMT)

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் இயக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.

பூந்தமல்லி,

தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூந்தமல்லி நகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவிர்க்க வேண்டிய பொருட்கள் மற்றும் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை பூந்தமல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இயக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா கூறுகையில்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய வாழை இலை, தையல் இலை, பாக்கு மட்டை தட்டு, மக்காச்சோளம் தட்டு மறு சுழற்சி செய்யக்கூடிய நிலையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவது மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய வாகனம் பூந்தமல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இயக்கப்படுகிறது. அது மட்டுமின்றி பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், ஓட்டல் நடத்தக்கூடியவர்கள் என அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் நிறுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் மறைமுகமாக பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிக வீடுகள் கொண்ட அடுக்குமாடிகுடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குப்பைகள் எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களே உரம் தயாரிக்கும் கிடங்கை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பதாகைகளையும், கோஷம் எழுப்பிய வண்ணம் பேரூராட்சி அலுவலகம், ஜி.என்.செட்டி தெரு, தூட்டார் தெரு, பஜார் தெரு, கர்ணம் தெரு, பிஞ்சலார் தெரு, முலிகி தெரு, எஸ்.பி.கோவில் தெரு வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பை, சணல்பை போன்றவற்றை பயன்படுத்துமாறு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story