ஒருதலைக்காதலால் நேர்ந்த விபரீதம்: கழுத்து அறுக்கப்பட்ட பள்ளி ஆசிரியை சாவு


ஒருதலைக்காதலால் நேர்ந்த விபரீதம்: கழுத்து அறுக்கப்பட்ட பள்ளி ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 20 July 2018 5:03 AM IST (Updated: 20 July 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட பள்ளி ஆசிரியை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரை ஒருதலையாக காதலித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பழனி,

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. இவருடைய மகள் பவித்ரா (வயது 24). பி.ஏ. படித்துள்ள பவித்ரா பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார். இவருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் வாலிபர் ஒருவருடன் ஆட்டோவில் சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பவித்ரா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் நள்ளிரவு 1 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக பவித்ராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகனும் மில் தொழிலாளியுமான மாயவன் (26) என்பவர் பவித்ராவுடன் நேற்று முன்தினம் இரவு வேளையில் ஆர்.எப். ரோட்டில் சுற்றித்திரிந்ததை பார்த்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. அதன்பின்னரே பவித்ராவை பிளேடால் கழுத்து அறுத்து கொன்றது மாயவன் தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாயவன் பவித்ராவுக்கு அண்ணன் உறவுமுறை கொண்டவர் ஆவார். அவர் பவித்ராவின் பெரியம்மா மகன் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக அவர் பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பவித்ராவிடம் அவர் அது குறித்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த மாயவன் பவித்ராவிடம் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரை தனிமையில் சந்தித்த மாயவன், தனது காதலை பவித்ராவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை பவித்ரா ஏற்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி பவித்ராவை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாயவன் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார், என்றனர். இதற்கிடையே நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக பழனி பஸ் நிலையம் வந்த மாயவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

Next Story