திண்டுக்கல் அருகே களைகட்டிய கிடா சண்டை போட்டி
திண்டுக்கல் அருகே கிடா சண்டை போட்டி களைகட்டியது.
திண்டுக்கல்,
அழிந்து வரும் கலையை பாதுகாக்கும் வகையில், நேற்று திண்டுக்கல் அருகே உள்ள குட்டியப்பட்டியில் ஆட்டு கிடா சண்டை நடந்தது. இந்த போட்டியில், திண்டுக்கல், மதுரை, நெல்லை, பொள்ளாச்சி, ராஜபாளையம், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 150 கிடாய்கள் கலந்து கொண்டன. இந்த போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
முன்னதாக, போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் போட்டி தொடங்கியது. ஒரே எடை அளவு கொண்ட 2 கிடாய்களை நடுவர்கள் தேர்வு செய்து களத்தில் இறக்கி விட்டனர். ஒவ்வொன்றும் தனது முழு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆக்ரோஷமாக மோதியதால் போட்டி களைகட்டியது.
கிடாய்கள் தனது நீண்ட கொம்புகளால் சக கிடாய்களை நேருக்குநேர் முட்டி தள்ளியதை பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். கிடா உரிமையாளர்களும் களத்தில் இறங்கி அதனை உற்சாகப்படுத்தினர். சில கிடாய்களின் மேல் வண்ண பொடிகளும் தூவப்பட்டிருந்தன. ஒரு கிடாயின் மீது தேசிய கொடியை நினைவுபடுத்தும் வகையில் மூன்று வண்ணங்களும் தடவப்பட்டிருந்தது.
பெரும்பாலான கிடாய்களின் முதுகில் அதிக அளவிலான முடி வளர்ந்ததை கண்டு பார்வையாளர்கள் ரசித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளர்களுக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது. 21 முட்டுவரை தாக்குபிடித்த 2 கிடாய்களின் உரிமையாளர்களுக்கும் பித்தளை அண்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட கிடா முட்டு நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காதர் ஒலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். கிடா சண்டையை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story