தமிழ்நாடு பெயர் சூட்டி 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
தமிழ்நாடு பெயர் சூட்டி 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டி பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பளுதூக்கும் பயிற்சியாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு தடகள போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 100 மீட்டர் ஓட்டபந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,500-ம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,500-ம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் வருகிற 23-ந் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story