நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளதால் தமிழகம்–கர்நாடகம் இடையே இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்காது குமாரசாமி பேட்டி


நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளதால் தமிழகம்–கர்நாடகம் இடையே இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்காது  குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளதால் தமிழகம்–கர்நாடகம் இடையே இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

மைசூரு, 

நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளதால் தமிழகம்–கர்நாடகம் இடையே இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

அணைகளில் சிறப்பு பூஜை

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டியது. கர்நாடக கடலோர மாவட்டங்கள், தென்கர்நாடக மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் பருவமழை இடைவிடாது கொட்டி வருகிறது. இதனால் காவிரி, ஹேமாவதி, கிருஷ்ணா, துங்கா, பத்ரா, கபிலா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பின. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணையும் முழுமையாக நிரம்பி விட்டன. இந்த நிலையில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

இதையடுத்து முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பிரச்சினை இருக்காது

இந்த ஆண்டு கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த ஆண்டு தமிழகம்–கர்நாடகம் இடையே தண்ணீர் பிரச்சினை இருக்காது. தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான தண்ணீர் பிரச்சினையை இந்த ஆண்டு இயற்கை தீர்த்து வைத்துள்ளது.

நல்ல மழை பெய்துள்ளதால், 2 மாநில விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் 2 மாநில விவசாயிகளும் சந்தோ‌ஷத்தில் உள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படும். அணைகள் நிரம்பியதும் பூஜை செய்துவது வாடிக்கையான ஒன்று தான். விவசாயிகள் நலம்பெற வேண்டி காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் சிறப்பு பூஜை செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர முயற்சி

இதையடுத்து நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு செய்ய வேண்டிய அனைத்து நடைமுறைகளும் சரியாக செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) மீண்டும் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்.

இந்த ஆண்டு கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அணைகள் அனைத்தும் ஏறக்குறைய நிரம்பிவிட்டன. இதனால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகம்–தமிழ்நாடு இடையே தண்ணீர் பிரச்சினை எழாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story