நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 9,200 லாரிகள் ஓடவில்லை சரக்குகள் தேங்கியதால் வர்த்தகம் பாதிப்பு


நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 9,200 லாரிகள் ஓடவில்லை சரக்குகள் தேங்கியதால் வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2018 10:30 PM GMT (Updated: 20 July 2018 7:10 PM GMT)

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், 9,200 லாரிகள் ஓடவில்லை.

நெல்லை, 

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், 9,200 லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக சரக்குகள் தேங்கியதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலைநிறுத்தம் தொடங்கியது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. எனவே, சரக்குகள் தேங்கியதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் லாரிகள் ஓடவில்லை. இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் கரையில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படவில்லை. அதேபோல் நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து கேரளா மாநிலத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படவில்லை. வெளிமாநிலங்களை சேர்ந்த ஒருசில லாரிகள் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒருசில லாரிகள் பராமரிப்பு பணிக்காக மெக்கானிக் ஷெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை மாற்றத்தை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும். தற்போது உயர்த்தப்பட்டு உள்ள டீசல் விலையை குறைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 5,700 லாரிகளை சங்கத்தில் பதிவு செய்து உள்ளனர். இதில் 5 ஆயிரத்து 200 லாரிகள் ஓடவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 500 பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், பால், தண்ணீர் டேங்கர் லாரிகள் வழக்கம் போல் ஓடின.

இவ்வாறு சங்கத்தினர் கூறினர்.

இதேபோல் நயினார்குளம் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், “டீசல் விலை உயர்வால் லாரிகள் வாடகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினசரி விலை மாற்றம் கொண்டு வந்த பிறகு மூட்டைக்கு ரூ.30 வரை வாடகை உயர்ந்து உள்ளது. இதனால் விலைவாசியும் உயருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. அதே போன்று வெளியூர்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த பெரும்பாலான லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில லாரிகள் மட்டும் சரக்கு பெட்டகங்களை துறைமுகத்துக்குள் கொண்டு சென்றன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் இருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சரக்கு கொண்டு செல்லும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் சுமார் 1,600 சரக்கு பெட்டகங்களும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தேங்கி உள்ளன. உப்பளங்களில் இருந்து உப்பு விற்பனைக்காக கொண்டு செல்லும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story