வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்பயிற்சிக்கு பதிவு செய்ய கவுசல் பாஞ்சி செயலி, கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்பயிற்சிக்கு பதிவு செய்ய கவுசல் பாஞ்சி செயலி, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கவுசல் பாஞ்சி என்ற செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ‘கவுசல் பாஞ்சி‘ என்ற செயலி குறித்து மாணவ–மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–

 மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்துள்ள மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி, பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, விவசாயிகள் நலன் வேளாண்மை மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை அதிகரித்தல், சுயதொழில் துவங்க ஊக்குவித்தல் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொழில்திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் கவுசல் பாஞ்சி என்ற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுஉள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த செயலியின் வாயிலாக பதிவு செய்வதன் மூலம், மத்திய தொழில்திறன் மேம்பாடு அமைச்சகத்தில் பதிவு பெற்ற பயிற்சி நிறுவனங்களை கொண்டு இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ற துறைகளில் தொழில்திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுப்பொருள் பதப்படுத்துதல், வாகன ஓட்டுனர் பயிற்சி, வாகன பழுதுபார்த்தல் பயிற்சி, மின்சாரம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி, வெல்டிங், பிளம்பிங் போன்ற பல்வேறு வகையான தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இத்தகைய பயிற்சியில் சேர விரும்பும் 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களது கைபேசியில் “கவுசல் பாஞ்சி“ செயலியினை தரவிறக்கம் செய்து விவரங்களை பதிவு செய்யவேண்டும். மேலும் இந்த செயலி குறித்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடத்தில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 


Next Story