ராமேசுவரத்தில் சிக்கிய வெடிபொருட்கள் சிவகங்கை ஆயுதக்கிடங்கிற்கு மாற்றம்


ராமேசுவரத்தில் சிக்கிய வெடிபொருட்கள் சிவகங்கை ஆயுதக்கிடங்கிற்கு மாற்றம்
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிபொருட்கள் நேற்று சிவகங்கை ஆயுதக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் பகுதியில் உள்ளது, அந்தோணியார்புரம். இந்த பகுதியை சேர்ந்த எடிசன் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 25–ந்தேதி கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும் போது சுமார் 3 அடி ஆழத்தில் இரும்பு பெட்டி இருந்தது.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பெட்டியை ஜே.சி.பி.எந்திரத்தின் உதவியுடன் தோண்டி வெளியே எடுத்து பார்த்த போது அதற்குள் ஏராளமான வெடிபொருட்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.

அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 5,500 எந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 4,928 எஸ்.எல்.ஆர். தோட்டக்கள், 400 துப்பாக்கி தோட்டாக்கள், 11 வெடிமருந்து பாக்கெட்டுகள், 199 டி.என்.டி. கண்ணிவெடிகள், 8 ரோல் ஹேப்பி பியூஸ் கேபிள்கள், 20 சிறிய ராக்கெட் லாஞ்சர் தோட்டாக்கள், ஒரு எக்ஸ்புளோசிவ் மோட்டார், 15 கிர்னெட், 87 சிக்னல் லேம்ப் ஆகியவை இருந்தன.

பின்னர் தோட்டாக்கள் 3 வகையாக தரம் பிரித்து பாதுகாப்பாக பேக்கிங் செய்து ராமநாதபுரம் ஆயுதக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. மற்ற வெடிபொருட்கள் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும் என்பதால் அங்கேயே குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி புதைத்து வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அந்த வெடிபொருட்களை உரிய அனுமதி கிடைத்ததும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று அழிக்க முடிவு செய்யப்பட்டது. இல்லாவிடில் சிவகங்கை, திருத்தங்கல், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஆயுதக்கிடங்கிற்கு எடுத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டது.

ஆனாலும் இந்த அபாயகரமான வெடிபொருட்கள் 20 நாட்களுக்கு மேலாகியும் அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்தனர். சம்பந்தப்பட்ட வீட்டில் வசித்து வந்த எடிசன் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டார். இதனால் பீதிஅடைந்த அருகில் வசித்தவர்களும் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர் சேக் உசேன் தங்கச்சிமடம் வந்தார். அவரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதிபதி (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் இந்த வெடிபொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அந்த வெடிபொருட்கள் 10 பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டன. பின்பு பகல் 1.30 மணி அளவில் இந்த வெடிபொருட்கள் அனைத்தும் தனி வாகனத்தில் மிகுந்த பாதுகாப்புடன் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள ஆயுதக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த வெடிபொருட்களை எப்போது அழிப்பது என்பது தொடர்பாக அதிகாரிகள் விரைவில் முடிவு செய்ய உள்ளனர்.

வெடிபொருட்கள் தங்கச்சிமடத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story