கூடலூரில் மின்வாரிய அலுவலகத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு


கூடலூரில் மின்வாரிய அலுவலகத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதால் பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

கூடலூர்,

கூடலூரில் மின்வாரிய அலுவலகம் கடந்த 2001–ம் ஆண்டு முதல் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013–ல் கட்டிட உரிமையாளர் இந்த இடம் சொந்த பயன்பாட்டுக்கு வேண்டும் எனக்கூறி மின்வாரிய அலுவலகத்தை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதிகாரிகளும் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற பலமுறை தவணை கேட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்திற்கு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடப்பணிகள் முடியும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அலுவலக கட்டிடத்துக்கு அதன் உரிமையாளர் நேற்று காலை வந்தார். பின்னர் அவர், அலுவலகத்தை மாற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக கூறி அலுவலகத்தை பூட்டினார். இதனால் காலையில் பணிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் வெளியே தவித்தனர். அதுபோல் அங்கு வந்த பொதுமக்களும் அலுவலகம் பூட்டிக்கிடந்ததால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அவதியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கட்டிட உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 நாட்களுக்குள் அலுவலகத்தை மாற்றி, கட்டிடத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் முதல் அலுவலகம் இயங்க கட்டிடத்தின் பூட்டை உரிமையாளர் திறந்து விட்டார். இதனால் கூடலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story