காரியாபட்டி அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சேதம்
காரியபட்டி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சேதமடைந்தன. போலீஸ் அதிகாரி வாகனம் மீது கல்வீசியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள ஆவரங்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 32) இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்த கிராமத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டும் வேலை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நரிக்குடி யூனியன் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் கழிப்பறை வேலை நடப்பதை பார்க்க வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் வேலைகள் முறையாக நடைபெறுவது இல்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த சசிக்குமாருக்கும், சீனிவானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அதிகாரிகள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதுதொடர்பாக அன்றிரவு இருதரப்பினரும் அரிவாள், கம்பு. போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர். அதில் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அதில் சிலர் காயமடைந்ததுடன், இருதரப்பினரின் வீடுகளும் சேதமடைந்தன. இதுகுறித்து இருதரப்பினரின் புகாரின் பேரில் சுமார் 63 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் கார் மீது ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் கல்வீசியதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.