பவானிசாகர் அணையில் இருந்து நாளை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


பவானிசாகர் அணையில் இருந்து நாளை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே குருமந்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு புகையிலை சாகுபடி செய்ய தடை கொண்டு வர உள்ளது. அதற்கு மாற்றாக புகையிலை உற்பத்திக்கு நிகரான வருமானம் தரக்கூடிய பயிர்களை எப்படி உற்பத்தி செய்வது என்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள். நம்பியூர், பெருந்துறை, குன்னத்தூர், காரமடை, அவினாசி உள்ளிட்ட பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மிக விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் கட்டமாக தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து எத்தனை நாட்கள் தண்ணீர் விடப்படும் என்று பின்னர் அறிவிக்கப்படும். தடப்பள்ளி–அரக்கன்கோட்டை வாய்க்காலில் 120 நாட்கள் தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. படித்து முடித்தவர்களுக்காக கோபியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story