லாரிகள் வேலைநிறுத்தம்: சேலம் மாவட்டத்தில் ரூ.100 கோடி சரக்குகள் தேக்கம்


லாரிகள் வேலைநிறுத்தம்: சேலம் மாவட்டத்தில் ரூ.100 கோடி சரக்குகள் தேக்கம்
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சேலம் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம்,

மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து முன்னதாகவே சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், மாநிலத்திற்குள் செல்லக்கூடிய சரக்குகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டன. நேற்று போராட்டம் தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை, லீபஜார் உள்ளிட்ட பகுதிகள் நேற்று லாரிகள் ஓடாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும், சாலையோரங்களிலும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தை தொடர்ந்து லாரி டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளி, இரும்பு கம்பிகள், சிமெண்டு, உரம், மஞ்சள், புளி, பால்பவுடர் மற்றும் மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்டவைகள் வெளி மாநிலத்திற்கும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் சரக்கு போக்குவரத்து முழுமையாக நின்றதால் இந்த பொருட்கள் தற்போது குடோன்களில் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அந்த லாரிகள் இயக்கப்படவில்லை. இந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை வராததால் விலைவாசி உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான சென்னகேசவன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று(நேற்று) 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. ஓரிரு நாட்களில் 100 சதவீத லாரிகளும் இயக்கப்பட மாட்டாது. போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

மேலும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.5 கோடி வரை வாடகை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர 25 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story