தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை


தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 21 July 2018 12:30 AM GMT (Updated: 20 July 2018 9:14 PM GMT)

தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்களை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அன்னப்பன்பேட்டை மேலத்தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா. இவருடைய மனைவி யசோதா. கணவன்-மனைவி இருவரும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். இவர்களுடைய மகன் ஜெயக்குமார்(வயது 45). இவரது மனைவி அனிதா(38). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தினேஷ்(9), தருனேஷ்(7) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் தினேஷ் 4-ம் வகுப்பும், தருனேஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜெயக்குமாருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கும் சரிவர செல்வது கிடையாது. தினமும் மது குடிப்பதற்காக அனிதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். மேலும் வரதட்சணை கேட்டு அனிதாவை கொடுமை செய்ததாகவும் தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தார். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என்று அனிதா கேள்வி எழுப்பினார்.

இதன் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை பார்த்த அக்கம், பக்கத்தினர், இது வழக்கமாக நடக்கக்கூடிய தகராறு தானே என்று நினைத்துக் கொண்டனர்.

ஆனால் கணவன்-மனைவிக்கு இடையேயான தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து அனிதாவின் பின்மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த தினேசும், தருனேசும் வேகமாக ஓடிச்சென்று அம்மாவை அடிக்க வேண்டாம் என்று ஜெயக்குமாரை தடுத்தனர்.

போதையில் இருந்த ஜெயக்குமாருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தான் பெற்ற பிள்ளைகள் என்றுகூட நினைக்காமல் அவர்கள இருவரையும் மண்வெட்டியால் அடித்ததுடன், வெட்டவும் செய்தார். இதனால் அவர்கள் சத்தம் போட்டபடி மயங்கி விழுந்தனர்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அனிதா தனது 2 மகன்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ், தருனேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த அனிதாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அனிதாவும் பரிதாபமாக இறந்தார். தாய்-மகன்கள் கொலை செய்யப்பட்டதை அறிந்த அனிதாவின் உறவினர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு இருந்த 3 பேரின் உடல்களையும் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அன்னப்பன்பேட்டைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாலையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். ஜெயக்குமாருடன் அவரது தம்பி, உறவினர்கள் என 4 பேர் சேர்ந்து தான் அனிதா உள்பட 3 பேரையும் கொலை செய்து இருக்கின்றனர். அந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரி தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல் கேட் முன்பு அனிதாவின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 4 பேரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களும் நேற்று மாலை 5.50 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் உடல்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரம்பையில் உள்ள அனிதாவின் தாயார் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

மண்வெட்டியால் ஓங்கி அடித்ததில் குழந்தைகளின் மூளை வெளியில் வந்தது

கொலை செய்யப்பட்ட அனிதாவின் அக்கா பிரேமா கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அனிதாவை ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைத்தோம். வரதட்சணை கேட்டு அனிதாவை கொடுமைப்படுத்தியதால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் தான் அனிதா வசித்து வந்தார். பெரியவர்கள் சமரசம் செய்ததால் ஜெயக்குமாருடன் சேர்ந்து வாழ அனிதாவையும், குழந்தைகளையும் அனுப்பி வைத்தோம். ஆனால் இவ்வளவு கொடூரமாக 3 பேரையும் கொலை செய்து விட்டான். மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் குழந்தைகளுக்கு மூளையே வெளியே வந்து விட்டது. இந்த மாதிரியான கொடுமை யாருக்கும் வரக்கூடாது. ஜெயக்குமார் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. அவருடைய உறவினர்களும் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்களையும் கைது செய்தால் தான் 3 பேரின் உடல்களையும் பெற்று கொள்வோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்த அனிதா

ஜெயக்குமாருக்கும், அனிதாவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது இல்லற வாழ்க்கையில் மதுவினால் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் எப்போதாவது மது குடித்து வந்த ஜெயக்குமார், மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிக்க தொடங்கினார். இதற்கு தேவையான பணத்தை மனைவியிடம் சண்டை போட்டு வாங்கினார். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தினமும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு காரணமாக கணவர் வீட்டில் இருந்து தனது குழந்தைகளுடன் வெளியேறிய அனிதா தஞ்சையை அடுத்த கரம்பையில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஜெயக்குமாரின் உறவினர்கள், கரம்பைக்கு வந்து அனிதாவின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இனிமேல் இது போன்று ஜெயக்குமார் தகராறு செய்யமாட்டார் என்று உறவினர்கள் உறுதி அளித்தனர். இதை ஏற்று அனிதாவையும், குழந்தைகளையும் ஜெயக்குமாருடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் அனிதாவையும், குழந்தைகளையும் ஜெயக்குமார் கொலை செய்து விட்டார்.

கொலை செய்யப்பட்ட அனிதாவின் தாயார் சிவக்கொழுந்து கண்ணீர் மல்க கூறியதாவது:-

திருமணம் ஆகி சில ஆண்டுகள் மட்டுமே எனது மகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினாள். ஜெயக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடிக்க ஆரம்பித்த நாள் முதல் தினமும் சண்டை தான் நடந்தது. கடந்த 3 மாதங்களாக எனது மகள் தாங்க முடியாத துன்பத்திற்கு ஆளானாள். இதனால் அனிதாவையும், பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்து கரம்பையில் உள்ள எங்களது வீட்டின் மாடியில் தான் குடி அமர்த்தினோம். கணவரும் வேலைக்கு செல்லாததால் ஆசிரியை வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை என்றும், இதனால் கொஞ்சம் பணம் இருந்தால் கொடு என்றும் அனிதா எங்களிடம் கேட்டாள். எங்களது மகளின் எதிர்காலம் கருதி வயலை விற்று பணத்தை கொடுத்து 1 மாதத்திற்கு முன்பு தான் கணவருடன் அனுப்பி வைத்தோம். ஆனால் எனது மகளையும், பேரக்குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்து விட்டனர். ஜெயக்குமார் மட்டும் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அவருடைய உறவினர்களும் சேர்ந்து தான் 3 பேரையும் கொலை செய்து இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story