‘பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் முறைகேடு’: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


‘பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் முறைகேடு’: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 July 2018 10:30 PM GMT (Updated: 20 July 2018 10:03 PM GMT)

பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

விவசாயி கோவிந்தராஜன்:- பண்ணை குட்டைகளை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி ஏழுமலை:- பிரம்மதேசம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் கேட்டு வரும் விவசாயிகளுக்கு, கடன் கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். பெரியதச்சூர் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.

கலெக்டர்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர் கடன் வழங்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரியதச்சூர் பகுதியில் ஏற்படும் மின்தடை மின்வாரியத்துறை மூலம் சரிசெய்யப்படும்.

விவசாயி சின்னத்தம்பி:- தென்பசியார், கர்ணாவூர் ஏரிகளுக்கு செல்லக்கூடிய வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கலெக்டர்: பொதுப்பணித்துறையினர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி கலிவரதன்:- திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு சரிவர பயிற்சி நடத்துவது இல்லை. பயிற்சி நடத்தினாலும் விவசாயிகளுக்கு முறையான தகவல் தெரிவிப்பதில்லை. மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு உடனுக்குடன் கரும்புக்கான பணம் கிடைக்காததால் விவசாயம் அழிந்துவிடும் நிலை உள்ளது. அவர்கள் அடுத்த பருவத்திற்கு பயிர் வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே கரும்பு நிலுவைத்தொகையை உடனே பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி விவரங்களை முன்கூட்டியே 3 வாரங்களுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும். கலையநல்லூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் வருகிற 31-ந் தேதிக்குள்ளும், செம்மேடு ஆலை நிர்வாகத்தினர் 25-ந் தேதிக்குள்ளும், முண்டியம்பாக்கம் ஆலை நிர்வாகத்தினர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதிக்குள்ளும் கரும்பு நிலுவைத்தொகையை வழங்கி விடுவதாக கூறியுள்ளனர். அதன்படி விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தினர் கட்டாயம் பணம் வழங்க வேண்டும்.

விவசாயி ராஜேந்திரன்:- விதை விற்பனை நிலையங்களில் தரமில்லாத விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கலெக்டர்: இதுசம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனை நிலையங்கள், குடோன்கள் ஆகியவற்றில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.

விவசாயி ரவி:- பதிவில்லாத கரும்புகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்க வேண்டும்.

கலெக்டர்: அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி சிவராமன்:- விழுப்புரம் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் நமது மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கூட்டு பட்டா வைத்துள்ள சிறுவிவசாயிகள் சிறு விவசாயி என்ற சான்று வாங்க முடியவில்லை. அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

கலெக்டர்: விரைவில் ஆவண செய்யப்படும்.

விவசாயி சுப்பிரமணியம்:- பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக வானூர் தாலுகா நல்லாவூரில் ஒருமாதமாக பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கிறார்கள். இதுபோன்று இன்னும் பல இடங்களில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதே குற்றச்சாட்டை விவசாயிகள் பலரும் பேசினர். தொடர்ந்து சுப்பிரமணியம் பேசுகையில், தெளிப்புநீர் பாசனத்திற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து வருடக்கணக்கில் காத்து வருகிறோம். மேல்மலையனூர்- சேத்பட் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக விவசாய நிலங்கள், கிணறுகளை கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர். விவசாய நிலங்கள், கிணறுகளை கையகப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கலெக்டர்: இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து நமது மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.93 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த தொகை 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்-லைனில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனே தெளிப்புநீர் பாசன வசதி செய்து கொடுக்கப்படும். நிலங்களை கையகப்படுத்தாமல் மேல்மலையனூர்-சேத்பட் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி முருகன்:- ஆலம்பாடி சித்தேரி ஓடை வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.அதுபோல் சென்னகுணத்தில் உள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல், மணிலா பயிர் செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கலெக்டர்: விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி கலியமூர்த்தி:- விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் உடனுக்குடன் பட்டா மாற்றம் செய்து கொடுப்பதில்லை.

கலெக்டர்: தாலுகா அலுவலகங்களில் விவசாயிகளுக்கு தாமதமின்றி உடனுக்குடன் பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், வேளாண் இணை இயக்குனர் சண்முகம், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மலர்விழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story