மேல்மலையனூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள்: விவசாயிகள் கவலை


மேல்மலையனூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள்: விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 July 2018 10:45 PM GMT (Updated: 20 July 2018 10:05 PM GMT)

மேல்மலையனூர் பகுதியில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள தாயனூர், மானந்தல், சீயப்பூண்டி, மோட்டூர் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் பருவமழை மற்றும் கிணற்று தண்ணீரை நம்பி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வந்தனர்.

அவற்றுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினர். நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மேலும் கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் கரும்பு பயிர்களுக்கு கடந்த சில வாரங்களாக தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. அதிகம் செலவு செய்து பராமரித்து வந்த கரும்பு பயிர்கள் தங்கள் கண்முன்னே கருகியதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீயப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கோடையில் பெய்த மழையை நம்பி நாங்கள் கரும்பு சாகுபடி செய்தோம். அதன் பிறகு மழை பெய்யாததால் கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் 2 அடி முதல் 3 அடி வரை வளர்ந்திருந்த கரும்பு பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. இந்த பயிர்களுக்கு நாங்கள் காப்பீடு செய்துள்ளோம். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story