மாட்டுங்காவில் கல்லூரி மாணவிகளை மானபங்கம் செய்து வந்த வாலிபர் கைது


மாட்டுங்காவில் கல்லூரி மாணவிகளை மானபங்கம் செய்து வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 July 2018 11:15 PM GMT (Updated: 20 July 2018 10:24 PM GMT)

மாட்டுங்காவில் கல்லூரி மாணவிகளை மானபங்கம் செய்து வந்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மாட்டுங்காவில் கல்லூரி மாணவிகளை மானபங்கம் செய்து வந்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாணவி மானபங்கம்

மும்பை மாட்டுங்காவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் அவரை மானபங்கம் செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். முன்னதாக அந்த வாலிபர் இன்னொரு மாணவியையும் மானபங்கம் செய்து இருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி மாணவிகள் தாங்கள் படித்து வரும் கல்லூரியில் தெரிவித்தனர். இதில், பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி மட்டும் மாட்டுங்கா போலீசில் புகார் கொடுத்தார்.

வாலிபர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், அதே வாலிபர் கடந்த புதன்கிழமை அந்த கல்லூரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவியை மானபங்கம் செய்து உள்ளார். அப்போது, குறிப்பிட்ட வாலிபரால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் 4 மாணவிகள் புகார் கூறினர்.

இந்தநிலையில், மாட்டுங்கா பகுதியில் சுற்றித்திரிந்த அந்த வாலிபரை கல்லூரியின் கராத்தே ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் சென்று மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

இதில், அவர் சயான் கோலிவாடாவை சேர்ந்த அங்குஷ் மகாதிக் (வயது27) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story