தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர், 

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப்தீட்சித் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பேசினர். அப்போது தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ரூ.602 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்து தேசிய நீர்வள ஆதார அமைப்புக்கு அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்றும், மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்றும் கூறிவிட்டது.

எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் நிலக்கடலை பயிர்களுக்கு களையெடுக்க 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதிலளித்த கலெக்டர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை களையெடுக்கும் பணிக்கு பயன்படுத்த முடியாது, மாமரம், தென்னை மரங்களுக்கு பாத்திக்கட்டுவதற்கு பயன்படுத்தலாம் என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய விவசாயிகள் அணைக்கட்டு தாலுகா அலுவலகம் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்வதில்லை. அதிகாரிகள் கலந்துகொண்டால் எங்கள் பிரச்சினைகளை அங்கேயே தீர்த்துகொள்வோம்.

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது. மணல் குவாரி அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

அதற்கு பதில் அளித்த கலெக்டர் அங்கு தற்காலிகமாகத்தான் மணல் குவாரி அமைக்கப்படுகிறது. 6 மாதம் தான் மணல் குவாரி நடத்தப்படும். இந்த குவாரியில் லாரிகளில் மணல் அள்ள அனுமதி கிடையாது. மாட்டு வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

அதன் பின்னர் பேசிய விவசாயிகள் பேரணாம்பட்டு பகுதியில் காட்டு யானையால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.

அம்மூர் ஏரி முழுவதும் வேலிக்காத்தான் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அதே போன்று அம்மூர் ஏரியில் இருந்து நரசிங்கபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாயும் புதர்மண்டி கிடக்கிறது. எனவே, ஏரியில் உள்ள வேலிக்காத்தான் முள்செடிகளை அகற்றி தூர்வாரவேண்டும்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்குவது போன்று சென்னை - பெங்களூரு சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

Next Story