வேலூர் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை, ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.10 கோடிவரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி. நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 20 சதவீதம் லாரிகள் ஓடியதாகவும், 80 சதவீத லாரிகள் ஓடவில்லை என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலூர் மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 10 லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். அதன்படி. நேற்று காலையும் 10 லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து பருப்பு, உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் போன்றவை வரவில்லை. அதே போன்று வேலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல பதிவு செய்யப்படவில்லை.
அனைத்து லாரிகளும் காட்பாடி ரோட்டில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த லாரி வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூட்டைத்தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.
லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாளை (இன்று) முதல் காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் விலை உயரவாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story