குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 20 July 2018 11:30 PM GMT (Updated: 20 July 2018 11:29 PM GMT)

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சாணார்பட்டி, 

சாணார்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடும் வறட்சி காரணமாக 2 ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. ஒரு ஆழ்துளை கிணற்றில் இருக்கிற தண்ணீர் மட்டுமே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் அந்த ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டாரும் பழுதானதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை தேடி தோட்டங்களுக்கு படையெடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குடம் தண்ணீரை ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலிக்குடங்களுடன் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஒன்றிய கூடுதல் ஆணையாளர் மணிமுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்தப்படும், அதுவரை 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி ஊராட்சி சார்பாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story