தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்


தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்
x
தினத்தந்தி 21 July 2018 7:58 AM GMT (Updated: 21 July 2018 7:58 AM GMT)

கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம்.

உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசம் விந்திய மலைத் தொடரின் பன்னா வனத்தில் முற்றிலுமாக அழிந்து போன புலிகள் இனத்தை மீண்டும் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர், விஞ்ஞானிகளும், வன அதிகாரிகளும். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர், ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை.

கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டாது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே புலிகள் வசிக்கின்றன. இந்தியாவில் புலிகள் அழிந்த-அழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மத்திய பிரதேசத்தின் விந்திய மலைத் தொடர் பன்னா வனப்பகுதி. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட புலிகள் வசித்தன. இது வன உயிரியல் மாபியாக்களின் கண்களை உறுத்தின. அதைத் தொடர்ந்து அப்பகுதி, புலிகள் வேட்டைக்காக மாபியாக்களின் சொர்க்க பூமியானது. குறிப்பாக, வட இந்தியாவின் பாரம்பரிய புலி வேட்டைக்காரர்கள் அங்கு இருந்த மொத்தப் புலிகளையும் வேட்டையாடி தீர்த்தனர். ஒருகட்டத்தில் அங்கு புலிகள் இனமே அழிந்துபோனது. அதன்பின் பல ஆண்டுகள் அங்கு புலிகள் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்ட திட்டங்கள் பலன் தரவில்லை.

புலிகள் மறு உருவாக்கம் என்பது அரிதினும் அரிதாகவே வெற்றி பெறக்கூடிய திட்டம். ஏனெனில் அதன் வாழ்க்கை முறை, அதன் மீதான வேட்டைகள், மனிதன்-புலி மோதல்கள் அதனை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. மேலும், புலிகள் தூண்டப்பட்ட சினை முறை மூலமே கர்ப்பம் தரிக்கின்றன. அதாவது, ஒரு பெண் புலி, பல ஆண் புலிகளுடன் பல முறை இணை சேர்ந்தாலும் அதுவாக விரும்பினால் மட்டுமே கருத்தரிக்கும். இது பூனைகள் குடும்பத்துக்கும் சில நாய்கள் குடும்பத்துக்கும் உரிய உயிரியல் உண்மை. இதனால், புலிக்குட்டிகள் உயிர் வாழும் வாய்ப்பு 50 சதவீதத்துக்கும் குறைவே.

ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் காப்பகம், தென் ஆப்பிரிக்கா உள்பட உலகின் பல வனங்களில் இதுபோன்ற திட்டங்கள் முயற்சி செய்து பார்க்கப்பட்டாலும் அவை வெற்றி பெறவில்லை. அந்த சூழலில்தான் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் இத்திட்டத்தை 2008-ம் ஆண்டு தொடங்கியது. ரமேஷ் என்ற தமிழர் இதற்கு தலைமை தாங்கினார். மொத்தம் 543 சதுர கி.மீ. கொண்ட பன்னா வனப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அங்கு சராசரியாக ஒரு சதுர கி.மீ. பரப்பில் 45 மான்கள் வரை இருப்பது தெரிந்தது. அதன்படி இங்கு 25 முதல் 35 புலிகள் வரை வசிக்கலாம். இதுவரை இங்கு ஆறு புலிக்குட்டிகள் இறந்துள்ளன. புலிக்குட்டிகளின் உயிர் வாழும் சாத்தியம் 50 சதவீதம்தான். ஆனால், பன்னாவில் அதை 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சதவீதம் ஓர் உலகச் சாதனை. 

Next Story