மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது; விவசாயிகள் மகிழ்ச்சி இன்று கல்லணை திறப்பு


மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது; விவசாயிகள் மகிழ்ச்சி இன்று கல்லணை திறப்பு
x
தினத்தந்தி 22 July 2018 4:45 AM IST (Updated: 22 July 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி,

நீர்மட்டம் 100 அடிக்கு மேல் தாண்டியதால் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. அணைக்கு வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தது. மாயனூர் கதவணையில் இருந்து 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இரவு 8.15 மணி அளவில் காவிரி தண்ணீர், திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் உள்ள வாத்தலை அணையை வந்தடைந்தது. பின்னர் முக்கொம்பு அணையை சென்றடைந்த அந்த தண்ணீர், வேகமாக பாய்ந்தோடி நள்ளிரவில் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணை நோக்கி காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

முன்னதாக காவிரி நீர் வருவதையொட்டி, முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் திறக்கப்பட்டது. முக்கொம்பில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். அந்த தண்ணீர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சி சிந்தாமணியை தாண்டி தஞ்சை மாவட்டம் கல்லணை நோக்கி சென்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முக்கொம்பில் தேக்கப்பட்ட தண்ணீருடன் சேர்ந்து, காவிரி தண்ணீரும் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கல்லணையை இன்று மதியம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திறப்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் 3 மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணித்துறை, வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். கல்லணை திறப்பதற்கு முன்னதாக அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படும். கல்லணை திறக்கப்பட்டதும் சீறிப்பாயும் காவிரி தண்ணீரில் விதை நெல், மலர்கள் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்படும்.

கல்லணை திறக்கப்படுவதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு சம்பா சாகுபடிகள் தொடங்கும். அதே வேளையில் தற்போது சாகுபடி செய்துள்ள குறுவைக்கும் இந்த தண்ணீர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவாக விதை நெல், உரம் போன்றவை வேளாண்மை மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருவதால், திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், தண்ணீர் வரும்போது ஆற்றுக்குள் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதை தவிர்க்கும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story