மானாமதுரை வைகை ஆற்றில் இரவு நேரங்களில் தொடரும் மணல் திருட்டு
மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் இரவு நேரத்தில் லாரிகள் மூலம் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள கல்குறிச்சி, வேதியரேந்தல், தெ.புதுக்கோட்டை, கரிசல்குளம், ஆலங்குளம், கீழப்பசலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைகை ஆற்றில் இரவு நேரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. மேலும் இங்கு வந்து மணல் அள்ளுபவர்கள் மாட்டு வண்டி, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து இரவு நேரத்தில் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த மணல் திருட்டு வாகனங்களுக்காகவே மானாமதுரை பகுதியில் இரவு முழுவதும் டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படுகின்றன. இதுதவிர இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வைகை ஆற்று பகுதியில் பகல் நேரத்தில் சாக்குப்பைகளில் மணலை அள்ளி, பின்னர் அந்த மணலை சாலையோரத்தில் அடுக்கி வைத்து, இரவு நேரங்களில் அவற்றை மினி வேன்கள், செங்கல் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்துகின்றனர்.
இவ்வாறு திருட்டுத்தனமாக அள்ளப்படும் ஆற்று மணல் சில இடங்களில் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான பணியில் உள்ள ஒப்பந்தக்காரர்கள், கட்டுமான பொறியாளர்கள் ஆகியோர் இதேபோல் திருட்டு மணலையே விரும்பி வாங்குகின்றனர். மானாமதுரை பகுதியில் இரவு நேரத்தில் நடைபெறும் இந்த தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றுப்படுகையில் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை அருகே கீழப்பசலை வைகை ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கண்துடைப்பிற்காக மாட்டு வண்டிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மணல் லாரிகளை கொண்டு மணல் அள்ளுபவர்களை கண்டு கொள்வது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு நபர்கள் லாரிகள் வாடகைக்கு பெற்றுக்கொண்டு இந்த பகுதியில் இரவு முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரை பகுதியில் அரசு மணல் குவாரி திறப்பதற்கு முன்பு இதேபோல் நடைபெறும் திருட்டு மணலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.