இளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
இளையான்குடியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பெண்கள், இளைஞர்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை மூடக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் இளையான்குடி புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மனிதநேய ஜனநாயக கட்சி, த.மு.மு.க. கட்சியினர் டாஸ்மாக் கடை திறப்பதால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கடையை மூடும்படி வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் கடையை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து அறிந்த தாசில்தார் கண்ணதாசன், இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.