அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2018 3:00 AM IST (Updated: 22 July 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையை ஒழிக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட கூட்டம், சிவகங்கையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் தமிழரசன், பொருளாளர் பாண்டி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், ஜாக்டோ–ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில செயலாளர் வாசுகி ஆகியோர் பேசினர். மேலும் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார், ஜேக்கப், செல்வக்குமார், துணைச் செயலாளர் சின்னப்பன், செல்லப்பாண்டி, அந்தோணிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலகங்களில் உள்ள தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், 8–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சீனிஜவகர் நன்றி கூறினார்.


Next Story