வேப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி, அரசு பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
வேப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவன் பலியானார். கழிப்பறை வசதி இல்லாத அரசு பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர்,
வேப்பூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகன் சசிபாலன் (வயது 14). இவன் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்றான். ஆனால் மாலை பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்பவில்லை.
இதில் பதறிய அவனது பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று தேடி பார்த்தனர். பின்னர் அவனது நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது தான் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை என்பதும், இயற்கை உபாதைக்காக பள்ளியின் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு மாணவர்கள் செல்வதும் தெரியவந்தது. அதே போல சசிபாலனும் மதியம் இடைவேளை நேரத்தில் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றவன், பள்ளிக்கும் வரவில்லை, வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து இது குறித்து முருகேசன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பள்ளியின் அருகே உள்ள விவசாய நிலப்பகுதியில் மாணவன் சசிபாலனை தேடி பார்த்தனர். அப்போது அங்குள்ள தரை கிணற்றில் சசிபாலன் பிணமாக மிதந்து கிடந்தான்.
இதனை பார்த்த போலீசார் மாணவனின் உடலை மீட்க வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் கிடந்த மாணவன் சசிபாலனின் உடலை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அப்போது சசிபாலனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரை வைப்பதாக இருந்தது.
இதையடுத்து சசிபாலனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வேப்பூர் அரசு பள்ளி முன்பு சசிபாலனின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இறந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த வேப்பூர் தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சசிபாலனின் குடும்பத்துக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும், சசிபாலனின் தாய்க்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும், அரசு பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதனை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காக விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன், தரை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.