மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்


மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி, செப்டம்பர் 21-ந்தேதி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கி பேசினார். அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் சீனிவாசன், பொருளாளர்கள் சந்தானகிருஷ்ணன், திருலோகசந்தர், உமாதேவி உள்பட அனைத்து டாக்டர்கள் சங்க நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, மாநில தலைவர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனிடமும் கோரிக்கையை விளக்கினோம். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனால், கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-வது வாரத்தில் இருந்து தர்ணா, பணி புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அதன்பின்னரும், அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். அதன்படி, செப்டம்பர் 21-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் பணிபுரியும் 20 ஆயிரம் டாக்டர்கள் பங்கேற்பார்கள். ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்து ஓய்வுபெறும் மத்திய அரசு டாக்டருக்கும், மாநில அரசு டாக்டருக்கும் இடையே ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியத்தில் வித்தியாசம் உள்ளது.

இது எங்களது நியாயமான கோரிக்கை ஆகும். இதனை அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு போதிய காலஅவகாசமும் கொடுத்துள்ளோம். நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் முதற்கட்ட போராட்டங்கள் நடைபெறும். அதற்குள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் எங்களது உரிமையை பெற வேலைநிறுத்தம் செய்வதை தவிர வேறு வழியில்லை. இதனால், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story