அரசு பள்ளி-அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அரசு பள்ளி-அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 July 2018 11:00 PM GMT (Updated: 21 July 2018 7:30 PM GMT)

அன்னவாசல் அருகே அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வீரப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்றம், சேவை மையம், அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சமையல் கூடம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் அலுவலகம், பள்ளி, அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை ஊழியர்கள் சென்று பார்த்தபோது 5 கட்டிடங்களின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து வீரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அன்னவாசல் போலீசார் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்த ஐந்து கட்டிடங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர். இதில் அங்கன்வாடி மையத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளை, மற்றும் அடுப்பு ஆகியவைகளும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையல் கூடத்தில் இருந்த 2 சமையல் எரிவாயு உருளை, அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் மற்றும் 15 கிலோ பருப்பு, 6 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவைதிருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்றம், சேவை மையம் ஆகியவற்றில் ஏதேனும் திருட்டு நடந்துள்ளதாக என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் உள்ள அரசு கட்டிடங்களின் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்ட செய்தி அறிந்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story