சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்ததாக தொழிலாளி உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்ததாக தொழிலாளி உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் பிரகாஷ் (வயது 38). தொழிலாளி. இவருக்கும் பவானி அருகேயுள்ள குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 மாதத்துக்கு முன் அந்த பெண்ணின் வீட்டிலேயே திருமணம் நடந்தது.
திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த பெண் மறுநாளே வீட்டில் இருந்து வெளியேறி ரெயிலில் சென்னை சென்றுவிட்டார். எக்மோர் ரெயில் நிலையத்தில் செய்வதறியாது நின்ற அந்த பெண்ணிடம் ரெயில்வே போலீசார் விசாரித்தபோது, அவரால் சரியாக பதில் கூற முடியவில்லை. அதனால் ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை சென்னை கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார்கள்.
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, ‘எனக்கு 16 வயதுதான் ஆகிறது. என்னை வற்புறுத்தி 36 வயதான ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்‘ என்று கூறி அழுதுள்ளார். உடனே போலீசார் பவானி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதே நேரம் அந்த பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்கள்.
இந்தநிலையில் பவானி போலீசார் சென்னை சென்று அந்த பெண்ணை அழைத்து வந்தார்கள். பின்னர் பெண்ணின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்தது தவறு, உங்கள் வீட்டில்தான் பெண்ணை வைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பிவைத்தார்கள்.
வீட்டுக்கு அழைத்து சென்ற சில நாட்களிலேயே பெற்றோர் வற்புறுத்தி சிறுமியை கணவர் பிரகாசுடன் அனுப்பிவைத்துள்ளனர். 2 நாட்கள் சிறுமி அங்கு இருந்துள்ளார். அப்போது பிரகாஷ் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த 5–ந் தேதி அன்று மீண்டும் விட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.
இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பவானி போலீசார் சென்னை சென்று சிறுமியை அழைத்து வந்து அவரிடம் விசாரித்தார்கள்.
அதைத்தொடர்ந்து சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்ததாக பிரகாஷ், அவருடைய அம்மா பாப்பத்தி (எ) வேதநாயகி (50), அக்காள் புனிதா (39), சித்தி ராஜேஸ்வரி (52) பெண்ணின் தாயார் உள்பட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) கைது செய்தார்கள். பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரகாசின் அக்காள் கணவர் மாதுராஜ் (42) மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.