பெரியாறு–வைகை அணையில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது, கலெக்டர் தகவல்
பெரியாறு–வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் உள்ளது என்று விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள், தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். அதனை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டப்பட்டியில் 45 ஏக்கர் கண்மாயை 20 அடி ஆழத்திற்கு தூர்வாரி விட்டனர். ஆனால் தற்போது அதற்கு மீண்டும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளனர். அதில் முறைகேடு நடக்கிறது என்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பேசும் போது, பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
வைகை அணையின் தற்போதைய நீர் மட்டம் 50.62 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு(2017) இதே நாளில் 30.05 அடிதான் தண்ணீர் நீர் மட்டம் இருந்தது. தற்போது வைகை அணையின் நீரின் இருப்பு அளவு 2 ஆயிரத்து 76 மில்லியன் கன அடி ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் நீரின் இருப்பு அளவு 370 மில்லியன் கன அடி இருந்தது.
பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டம் 134.40 அடி ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 111.20 அடி இருந்தது. தற்போது பெரியார் அணையில் நீர் இருப்பின் அளவு 5726 மில்லியன் கன அடி ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 1102 மில்லியன் கன அடி இருந்தது. இந்த புள்ளி விபரப்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வைகை அணையின் நீர் மட்டம் 7 மடங்காகவும், பெரியாறு அணையின் நீர் மட்டம் 4 மடங்கும் உயர்ந்து போதிய அளவில் உள்ளது. எனவே விவசாயிகள் ஆடி மாதத்தில் பயிர்களை நடவு செய்வதற்கு தயாராக உள்ளனர். மேலூர் விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் சட்டப்படி பெற்றுத்தரப்படும். கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.