8 வழி பசுமை சாலைக்காக ‘ஹெலிகேமரா’ மூலம் வீடுகள், மரங்கள் கணக்கெடுக்கும் பணி


8 வழி பசுமை சாலைக்காக ‘ஹெலிகேமரா’ மூலம் வீடுகள், மரங்கள் கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 22 July 2018 3:45 AM IST (Updated: 22 July 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கற்களை நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பனமரத்துப்பட்டி,

மேலும் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களில் மரங்கள், செடிகள், நீண்ட கால பயிர்கள், குறுகிய கால பயிர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மை துறை அதிகாரிகளும், வீடுகள் கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் தற்போது சேலம் மாவட்டத்தில் நிலவாரப்பட்டி, பாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ‘ஹெலிகேமரா’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் நிலவாரப்பட்டி, பாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், மரங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஹெலிகேமரா பறப்பதை கண்ட இந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஹெலிகேமராவை இயக்கிய நபரிடம் சென்று யார் நீங்கள்? இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டனர். அப்போது அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில் மரங்கள், வீடுகள் கணக்கெடுக்க வீடியோ பதிவு செய்வதற்காக இந்த ஹெலிகேமரா பறக்க விடப்பட்டுள்ளது. எனவே யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது.

8 வழி பசுமை சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் தென்னை, பாக்கு, வாழை மற்றும் மாமரங்கள் ஆகியவை எவ்வளவு உள்ளன?, இந்த பகுதிகளில் எத்தனை வீடுகள், கட்டிடங்கள் உள்ளன? ஆகியவற்றை கணக்கெடுக்க ‘ஹெலிகேமரா‘ மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ பதிவுகள் அனைத்தும் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பப்படும். அதன் பின்னர் உயர் அதிகாரிகள் இந்த பகுதிகளில் எவ்வளவு மரங்கள், வீடுகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story