மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு 115 அடியை எட்டியது


மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு 115 அடியை எட்டியது
x
தினத்தந்தி 22 July 2018 4:45 AM IST (Updated: 22 July 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, 115 அடியை எட்டியது.

மேட்டூர்,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 13-வது நாளாக நீடித்தது. மேலும் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட அதிகமான தண்ணீர் கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மள,மளவென உயர்ந்து கொண்டே வந்தது. நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரத்து 954 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 64 ஆயிரத்து 595 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாக இருந்தது. நேற்று காலை 114.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று மதியம் அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தால், அணை முழு கொள்ளளவான 120 அடி உயரத்தை ஒருசில நாட்களில் எட்டிப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story