மத்தூர் அருகே கோவில் விழாவில் பரிதாபம்: பனைமரம் சாய்ந்து சிறுவன் சாவு


மத்தூர் அருகே கோவில் விழாவில் பரிதாபம்: பனைமரம் சாய்ந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே கோவில் விழாவில் பனைமரம் விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே உள்ள மிண்டிகிரியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). மத்தூரில் ஊத்தங்கரை சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சத்யா (35) என்ற மனைவியும், சண்முகம் (11), ரகு (10), ஜெயபிரதாப் (7) என்ற 3 மகன்களும் உள்ளனர். இதில் ரகு மிண்டிகிரி அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், மிண்டிகிரிக்கு பக்கமுள்ள சந்தம்பட்டி ஏரிக்கரை ஓம்சக்தி கோவிலில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ‘அர்ச்சுனன் தபசு’ என்ற தெருக்கூத்து நாடகம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதை பார்ப்பதற்காக சத்யா, தனது மகன் ரகுவுடன் அங்கு சென்றிருந்தார்.

இரவெல்லாம் நடைபெற கூடிய இந்த தெருக்கூத்தின் முடிவில் அர்ச்சுனன் மரம் மீது ஏறி தவம் செய்ய கூடிய காட்சி இடம் பெறுவது வழக்கம். இதற்காக நேற்று அதிகாலை சுமார் 30 அடி உயர பனைமரம், மர படிக்கட்டுகளுடன் உச்சியில் பரணுடன் ஏற்பாடு செய்யப்பட்டு மண்ணில் புதைக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது.

இதையொட்டி பெரிய கயிறுகள் மூலமாக இழுத்து பனைமரத்தை மண்ணில் நிற்க வைக்க பொதுமக்கள் சிலர் முயற்சி செய்தனர். அந்த நேரம் யாரும் எதிர்பாராதவகையில் திடீரென பனைமரம் சாய்ந்து கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த ரகுவின் தலை மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய தாய் சத்யா, உடலை மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதார். இது அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விழா குழுவை சேர்ந்த சாந்தி, மாதம்மாள், பாஞ்சாலை, கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் 13 பேர் மீதும், அடையாளம் தெரியாத சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் திருவிழாவின் போது பனைமரம் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story