லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.20 கோடி தேங்காய்கள் தேக்கம்


லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.20 கோடி தேங்காய்கள் தேக்கம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.20 கோடி மதிப்பிலான தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளது.

பரமத்தி வேலூர்,

தமிழகத்தில் தேங்காய் ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் என தனித்தனியாக தேங்காய்களை சேகரித்து வைக்கும் கிடங்கு (குடோன்) வைத்துள்ளனர். இவ்வாறு சேமித்து வைத்துள்ள தேங்காய்கள் உரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு மூட்டைகளாக கட்டப்பட்டு லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், பீகார், மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் ரூ.10 கோடி மதிப்புள்ள தேங்காய்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு லாரி ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான தேங்காய்களை மூட்டைகளில் அடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த தொழிலில் தென்னை மரம் ஏறுபவர்கள், காய்களை சேகரித்து லாரிகளுக்கு ஏற்றுபவர்கள், தேங்காய்களை உரிப்பவர்கள் உள்பட நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

இதன் காரணமாக தேங்காய் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்படுவதோடு, நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேங்காய்கள் வீதம் 2 நாட்களில் ரூ.20 கோடி மதிப்பிலான தேக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Next Story