படப்பை அருகே அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை


படப்பை அருகே அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 22 July 2018 4:16 AM IST (Updated: 22 July 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் மகனே தீர்த்துக்கட்டினாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சாலமங்கலம் கலைஞர் நகரை சேர்ந்தவர் மூங்கிலான் என்கிற சுப்புராயன் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாகவும் இருந்து வந்தார்.

சாலமங்கலம் பகுதியில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையை ஒட்டி சுப்புராயனுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு கட்டிட வேலை நடந்து வந்தது. தினமும் வீட்டில் இருந்து நடந்து சென்று கட்டிட பணிகளை அவர் பார்த்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் கட்டிட பணியை பார்க்க சென்ற சுப்புராயன், திரும்பி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுப்புராயனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சுப்புராயனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதனையடுத்து சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்புராயன் தனது சொத்துகளை வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகன் செந்தில்குமார் என்பவருக்கும், சுப்புராயனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த பிரச்சினையின் காரணமாக சுப்புராயன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள செந்தில்குமார் பிடிபட்ட பின்னர் தான், சொத்து தகராறில் அவர் தனது தந்தையை தீர்த்து கட்டினாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story