தோவாளை அருகே விபத்து புதுமாப்பிள்ளை பலி


தோவாளை அருகே விபத்து புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 8:52 PM IST)
t-max-icont-min-icon

தோவாளை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். பாலப்பணி நடைபெற்ற இடத்தில் தடுப்பு வேலி அமைக்காததால், இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

ஆரல்வாய்மொழி,

ஈத்தாமொழியை அடுத்த பழவிளை பூவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சூரிய ஜெயக்குமார். இவருடைய மகன் மணிபாரதி(வயது 23). இவர் நாகர்கோவில் அருகே உள்ள எள்ளுவிளையில் மோட்டார்சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி பெண்பார்த்து அடுத்த மாதம்(ஆகஸ்ட்) திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஈத்தாமொழி தருமபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(22). இவரும், புதுமாப்பிள்ளையான மணிபாரதியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பிரபாகரன், ஆரல்வாய்மொழி குமாரபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து நண்பர் மணிபாரதி, பழுது நீக்க வந்த ஸ்கூட்டரை எடுத்து வந்தார். அதை மணிபாரதி ஓட்டினார். பின்னால் பிரபாகரன் அமர்ந்திருந்தார்.

தோவாளை அருகே மயிலாடி விலக்கு பகுதியில் சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஒரு பகுதியில் பாலப்பணி முடிந்து போக்குவரத்து நடந்து வருகிறது. மறுபகுதியில் பாலப்பணி நிறைவடைந்துள்ளது. ஆனால் பாலத்தை ஒட்டியுள்ள பள்ளம் மூடப்படாமல் இருந்தது.

நள்ளிரவில் இருவரும் ஸ்கூட்டரில் பாலப்பகுதியில் வந்தபோது, திடீரென பாலத்தை ஒட்டியுள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தனர். இதில் மணிபாரதி தூக்கி வீசப்பட்டு பாலத்தின் காங்கிரீட் தளத்தில் தலை மோதி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரபாகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைதொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலப்பணி நடைபெற்ற இடத்தில் பணியில் ஈடுபட்டவர்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் இரவில் பணி நடைபெறும் இடத்தில் மின்விளக்கு வசதியும், வேலை நடைபெறுவதற்கான அறிவிப்பு பதாகைகளும் வைக்கவில்லை. அங்கு தடுப்பு வேலியும் அமைக்கப்படவில்லை.

இதனால் நள்ளிரவில் ஸ்கூட்டரை ஓட்டிசென்ற மணிபாரதிக்கு பாலப்பணி நடைபெறுவது தெரியாததால் விபத்தில் சிக்கி பலியானார். அதன்பிறகு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் தடுப்பு வேலியை அமைத்தனர். முன்பே தடுப்பு வேலி அமைத்து இருந்தால் உயிர் பலியை தடுத்து இருக்கலாம் என்பது பொது மக்களின் ஆதங்கம் ஆகும்.

Next Story