ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்: வங்கிக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

மகளின் கல்விக்கடனுக்காக ஓய்வு பெற்ற வணிகவரி அதிகாரியின் பென்சன் கணக்கை முடக்கி வைத்த வங்கி, ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்தவர் ராமு, மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
வணிகவரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு மாதந்தோறும் பென்சன் வழங்கப்படுகிறது. அந்த தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்படுவது வழக்கம். கடந்த 1.3.2013 அன்று ஏ.டி.எம். கார்டு மூலம் என்னுடைய பென்சன் தொகையை எடுக்க முயன்றேன். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. 2 நாட்கள் கழித்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று முறையிட்டேன்.
அப்போது அவர்கள், என்னுடைய மகளின் கல்விக்கடன் நிலுவையில் இருப்பதாகவும், அதற்காக என்னுடைய வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்கள். எனது மகளின் கல்விக்காக வாங்கிய கடனுக்கு உத்தரவாதமாக சொத்து பத்திரங்களை கொடுத்து சட்டப்படி கடன் வாங்கி உள்ளோம். அப்படி இருக்கும்போது எனது பென்சன் கணக்கை முடக்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கின்படி எனது கணக்கை முடக்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று வங்கிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் என்னுடைய கணக்கு முடக்க நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால் 5 மாதங்கள் கணக்கை முடக்கி வைத்திருந்த சமயத்தில் பணம் இல்லாமல் நான் கஷ்டப்பட்டேன். கடும் மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனவே இதற்கான நஷ்டஈட்டு தொகையாக ரூ.2 லட்சம் வழங்க வங்கிக்கிளைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
கடன் நிலுவையில் இருக்கும்போது சட்டப்படி கடனை வசூலிக்க உரிமை உள்ளது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடனை வசூலிக்க எல்லாவிதமான வழிகளையும் கையாள முடியாது. அதாவது பென்சன் கணக்கை எந்த காரணத்தை காட்டியும் முடக்கி வைக்க வங்கிக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் மகளுக்கு பெற்றுள்ள கல்விக்கடனுக்காக தன்னுடைய சொத்து பத்திரங்களை அடமானம் வைத்துள்ளார். இதற்காக சேமிப்பு கணக்கை முடக்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே மனுதாரர் விஷயத்தில் வங்கி எடுத்த நடவடிக்கையானது சேவைக்குறைபாடு உள்ளதை காட்டுகிறது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு தொகையை வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.