கூடலூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
கூடலூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை மீட்பு குழுவினர் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை பண்ணையும் அமைத்தனர்.
கூடலூர்,
கூடலூர் பசுமை மீட்பு குழு, கோவை நட்பு குழு ஆகியவை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நடைபெற்றது. மேலும் ஏராளமான மாணவிகளும் ஊர்வலமாக சென்றனர். கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதற்கு பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். நிர்வாகி சங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் சத்தியநேசன், ஆசிரியர் கிரு‘ணகுமார், சுரேஷ்குமார், சந்திரகுமார், கோவை நட்பு குழு நிர்வாகிகள் கவுதம், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நான்குமுனை சந்திப்பு, மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம் வழியாக ஊட்டி ரோட்டில் சென்றது. பின்னர் மேல் கூடலூர் வழியாக தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.
ஊர்வலத்தில் பசுமையை காப்போம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை பண்ணை அமைக்கும் பணியில் பசுமை மீட்பு குழு தொண்டர்கள் ஈடுபட்டனர். அரசு டாக்டர் மயில்சாமி கலந்து கொண்டு மூலிகை நாற்றுக்களை நட்டு தொடங்கி வைத்து பேசினார். மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்திலும் மூலிகை நாற்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பசுமை மீட்பு மற்றும் கோவை நட்பு குழுவினர், பசுமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு, நிர்வாகி சங்கர் ஆகியோர் கூறும்போது, இன்றைய காலத்தில் வனம் மற்றும் பசுமை இழந்து வருகிறது. இதனால் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் அழிந்து தண்ணீருக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாட்டால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. பசுமையை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக நூலகங்கள், ஆஸ்பத்திரி வளாகங்களில் மூலிகை பண்ணைகள், மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். கூடலூர் பகுதியில் மாணவர்களை ஒன்றிணைத்து அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை காக்க முயற்சி செய்யப்படுகிறது, என்றனர்.