35 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்


35 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 July 2018 3:15 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு ஊட்டியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் பேயத்தேவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸ்ரா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

நீலகிரியில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 2015–ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய தேக்கநிலை ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலம் வழங்கப்படுகிறது. மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல சத்துணவு பெண் ஊழியர்களுக்கு 9 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

பள்ளிகளில் சமையல் கூடங்களில் உணவூட்டும் மானிய செலவை ஒரு குழந்தைக்கு ரூ.5 என நிர்ணயம் செய்ய வேண்டும். பணி ஓய்வின்போது வழங்கப்படும் பணிக்கொடை ஒட்டுமொத்த தொகையை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமாகவும், சமையலர், உதவியாளருக்கு ரூ.3 லட்சமாகவும் வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவது இல்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிமூப்பு அடிப்படையில் தகுதி உள்ள சத்துணவு உதவியாளர் சமையலராகவும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அமைப்பாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் இரண்டு, மூன்று மையங்களில் கூடுதல் பொறுப்பேற்று நடத்தி வரும் சூழ்நிலை உள்ளது. மேலும் சமையல் உதவியாளர்கள் இல்லாத மையங்களில் அமைப்பாளர்கள் சமையலராக மாற வேண்டிய நிலையும் காணப்படுகிறது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். நீலகிரியில் பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.20 விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதனை தொடர்ந்து மாநாட்டில் நீலகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, மாவட்ட தலைவராக விஜயா, செயலாளராக சிவதாஸ், பொருளாளராக செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினராக மேரிஹல்டா, துணை தலைவர்களாக முருகன், லில்லி, சந்திரிகா, சீதா, துணை செயலாளர்களாக ஜெகநாதன், தவசுமணி, வளர்மதி, சுகுனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story