வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை அதிகாரி ஆய்வு


வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2018 4:00 AM IST (Updated: 23 July 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மண்டல கண்காணிப்பாளரும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட (திருச்சியின்) கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாசன நீர் ஆதார வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை தஞ்சை, திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மண்டல கண்காணிப்பாளரும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் மூலமாக திருமானூர் ஒன்றியம், கண்டிராதித்தம் கிராமத்தில் உள்ள கல்வாரி ஓடையை சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில், 7 ஆயிரம் மீட்டர் வரை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கண்டிராதித்தம், மேட்டுத்தெரு மற்றும் அரண்மனைகுறிச்சி ஆகிய கிராமங்களில் 1,350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியார் நீட்டிப்பு வாய்க்கால் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடை பெறுகிறது. இதன் மூலம் பாளையப்பாடி, அன்னிமங்கலம், காரைப்பாக்கம், மஞ்சமேடு மற்றும் திருமானூர் ஆகிய கிராமங்களில் 1,925 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து, கடைமடை பகுதிக்கும் தடையில்லாமல் காவிரி தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஆற்றுப்பாதுகாப்பு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் (திருச்சி) செயற்பொறியாளர் கணேசன், மருதையாறு கோட்ட செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி, அரியலூர் கோட்டாட்சியர் சத்திய நாராயணன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் (லால்குடி) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story