காட்டு யானை தாக்கி விவசாயி பலி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்


காட்டு யானை தாக்கி விவசாயி பலி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2018 3:45 AM IST (Updated: 23 July 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். அவரது உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டுபட்டி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 45). விவசாயி. இவர், ஓசூர் அருகே உள்ள ஆழியாளம் பகுதியில் விவசாயம் செய்து அங்கு குடிசை அமைத்து தங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, மாதுவின் நிலத்திற்கு சென்றது.

யானை பிளிறிய சத்தம் கேட்டு மாது குடிசையில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்த உடன் ஆக்ரோஷமாக ஓடி வந்த யானை மாதுவை துதிக்கையால் தூக்கி வீசி, தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், யானை தாக்கி மாது பலியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மாதுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இறந்து போன மாதுவின் உடலை எடுக்க விட மாட்டோம். யானை தாக்கி விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இங்கு கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்த முருகன் எம்.எல்.ஏ., தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓசூர் வனச்சரகர் சீதாராமன், சூளகிரி தனி தாசில்தார் ரெஜினா ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அவர்கள், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், உடலை எடுக்க பொதுமக்கள் சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே 4 யானைகள் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி, புன்னாகரம் பகுதிகளில் சுற்றுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். 

Next Story