பெண் அரசு ஊழியரை கட்டிப்போட்டு நகை- வெள்ளி பொருட்கள் கொள்ளை போலீசார் வலைவீச்சு


பெண் அரசு ஊழியரை கட்டிப்போட்டு நகை- வெள்ளி பொருட்கள் கொள்ளை போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 July 2018 3:45 AM IST (Updated: 24 July 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருமாந்துறை அருகே பெண் அரசு ஊழியரை கட்டிப்போட்டு 15 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஸ்டெல்லா (வயது 43). இவரது மகன் கார்த்திக். ஸ்டெல்லா பெரம்பலூர் அரசு பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் அருகில் உள்ள தொழுதூருக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்தனர். பின்னர் ஸ்டெல்லாவின் கையை மர்மநபர்கள் 2 பேர் கட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். மேலும் வீட்டில் உள்ள நகைகள்-பணத்தை எடுத்து தருமாறு கூறினர்.

இதையடுத்து மர்மநபர்கள் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் எடுத்து கொண்டு, 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதைப்பார்த்து அருகில் உள்ளவர்கள் கார்த்திக் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை, வெள்ளி பொருட்கள், காரை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். அரசு பள்ளி எழுத்தர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்டெல்லா வீட்டில் இருந்து மர்ம நபர்கள் ஓட்டி சென்ற கார் வெங்கனூர் அருகே நின்று கொண்டிருந்தது. இதை போலீசார் கைப்பற்றி மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

Next Story