அ.ம.மு.க. தலைமையை ஏற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் டி.டி.வி.தினகரன் பேட்டி


அ.ம.மு.க. தலைமையை ஏற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. தலைமையை ஏற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் என்று அரூரில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை முன்கூட்டியே தொடங்கி இருக்க வேண்டும். தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் அளவு குறையும். பருவமழையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க விரைவாக நடவடிக்கைகளை எடுத்து விவசாய பணிகளை மேம்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைகள் தொடரும் என்று நம்புகிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையை ஏற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தில் மக்கள் நலனை காக்கும் நல்லாட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம்.

தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன், அரூர் தொகுதியில் ஆர்.ஆர்.முருகன், தர்மபுரி தொகுதியில் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story