பெங்களூரு-மைசூரு இடையே ரூ.5,019 கோடி செலவில் 6 வழிச்சாலை


பெங்களூரு-மைசூரு இடையே ரூ.5,019 கோடி செலவில் 6 வழிச்சாலை
x
தினத்தந்தி 24 July 2018 3:30 AM IST (Updated: 24 July 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-மைசூரு இடையே ரூ.5,019 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.

பெங்களூரு,

பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.5,019 கோடியில் பெங்களூரு-மைசூரு இடையே 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 63 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 10 நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும். இந்த திட்ட பணிகள் 2 தொகுப்புகளாக(பேக்கேஜ்) பிரித்து செயல்படுத்தப்படுகிறது.

முதல் தொகுப்பில் பெங்களூரு முதல் நிடுகட்டா வரையில் 56 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 2-வது தொகுப்பில் நிடுகட்டாவில் இருந்து மைசூரு வரை 61 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைக்கும் பணியையும், திட்ட பணிகளை கண்காணிப்பதையும் மாநில அரசு செய்கிறது. அந்த சாலையில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல் துமகூரு-சிவமொக்கா இடையே ரூ.1,062 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

பெலகாவி-கானப்பூர் இடையே ரூ.803 கோடி செலவிலும், கானாப்பூரில் இருந்து கோவா மாநில எல்லை வரை ரூ.440 கோடி செலவிலும் 4 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மொத்தம் 466 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இது தவிர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,700 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

இதற்கான திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். சமீபத்தில் முதல்-மந்திரியுடன் நான் டெல்லிக்கு சென்று இருந்தேன். அப்போது மத்திய மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து இந்த திட்டங்களுக்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர், சாலை திட்டங்களுக்கான சேவை வரி 12½ சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டார்.

நாங்கள் பெங்களூரு திரும்பியதும், அதுபற்றி ஆலோசனை நடத்தி சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான சேவை வரியை 2½ சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளோம். இதுபற்றி விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம். அதனால் கர்நாடகத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவாக அனுமதி வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிகந் தூரில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிராடி வனப்பகுதி சாலையில் இன்னும் சில பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் பஸ் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவாக முடிக்கும்படி ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளோம். அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிவிட்டார்.

ஆனால் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாநில அரசு நடந்துகொள்ளும். இவ்வாறு எச்.டி. ரேவண்ணா கூறினார்.

Next Story