உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 July 2018 3:45 AM IST (Updated: 24 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது சின்னகுப்பம் கிராமம். இக்கிராமம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பின்னர் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி உயர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.17 லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் சின்னகுப்பம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சின்னகுப்பம் கிராமத்தில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், தங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையேற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் சின்னகுப்பம் கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story